Friday 9 March 2012

பங்கு வர்த்தகம் எப்படி நடக்கிறது?

இதுவரை பங்கு என்றால் என்ன, அதன் அடிப்படை விஷயங்கள் என்ன என்று பார்த்தோம், இனி பங்குகள் வர்த்தகமாவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.


பங்கு பத்திரம் (SHARE CERTIFICATE):
முதன்முதலாக பங்குச்சந்தை ஆரம்பித்தவுடன், டீமேட் கணக்கு (DEMAT ACCOUNT) என்பதே இல்லை, பிறகு எப்படி வர்த்தகம் செய்தார்கள் என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) கொடுக்கப்படும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் (SHARE CERTIFICATE NUMBER) இருக்கும், ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (SHARE HOLDERS REGISTER) வைத்து, அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை என அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.

பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்று விரும்பினால் அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் வாங்குபவரும் கையொப்பமிடப்பட்ட பின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பங்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும்.

மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை.



டீமேட் கணக்கு (DEMAT ACCOUNT):
தற்போது பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "DEMATERIALIZATION" என்று அழைக்கப்படும் "DEMAT" கணக்கு முறை வந்து விட்டது. இந்த முறைப்படி பங்கு அச்சடிப்பதற்கு பதிலாக எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது மற்றும் வாங்கப்படுகிறது. நிறுவனம் இன்றும் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது.

ஆனால்  இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் DEMAT ACCOUNT என்று சொல்லப்படும் DEMAT கணக்கை தொடங்க வேண்டும். DEMAT கணக்கை சில வங்கிகள் தங்களது SAVINGS கணக்குடன் இணைத்தே வழங்குகின்றன. ஆனாலும் வர்த்தகம் செய்ய TRADING ACCOUNT தேவை, அதற்கு நாம் தனியாக பங்கு தரகரிடம் TRADING கணக்கை தொடங்க வேண்டும்.

இதற்கு பதிலாக நாம் ஒருமுறை பங்கு தரகரிடம் தொடர்பு கொண்டால் அவர்களே DEMAT கணக்குடன் TRADING கணக்கையும் சேர்த்தே தொடங்கி கொடுத்துவிடுவார். கணக்கு தொடங்கியவுடன், புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் கணினி மூலமாக நாமே நேரிடையாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.



பங்குச்சந்தை (SHARE MARKET):
பங்கு வர்த்தகம் செய்வது எப்படி என்று பார்த்தோம், பங்கு வர்த்தகம் நடக்கும் பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா, அது குறித்து இப்போது பார்ப்போம்.



"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். BSE என்பது மும்பை பங்கு சந்தை (சென்செக்ஸ் அதாவது SENSEX என்றும் அழைப்பர்)  மற்றும் NSE என்பது தேசிய பங்கு சந்தை (நிஃப்டி அதாவது NIFTY என்றும் அழைப்பர்). இந்த இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக நமது DEMAT மற்றும் TRADING கணக்கு மூலம் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கிஇரண்டாவது நாளில் நம்முடைய DEMAT கணக்கில் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ, அதே மாதிரி தான் DEMAT கணக்கிலும். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய DEMAT கணக்கிலிருந்து கழிக்கப்படும்.


பங்குச்சந்தை குறியீடு:
அதுசரி பங்குச்சந்தை பற்றி பார்த்தோம், பங்குச்சந்தை நிலவரத்தை எப்படி அறிந்துகொள்வது என்று பார்ப்போம். அதற்கு வைக்கப்பட்டிருக்கும் அளவுகோல்தான் பங்குச்சந்தை குறியீடு. NSE மற்றும் BSE பங்குச்சந்தைகளுக்கு தனித்தனி குறியீடு உள்ளது. அவற்றைக் கணக்கிடும் முறை மட்டுமே மாறுபடுகிறது. சென்செக்ஸ் குறியீடு 30 பங்குகளின் சராசரியையும், நிஃப்டி குறியீடு 50 பங்குகளின் சராசரியையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.
 
இவையனைத்தும் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன். இனி அடுத்த பகுதியில் மேலும் சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

No comments:

Post a Comment